யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சி அலுவலகம் மீது நள்ளிரவு தீவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (13) இரவு 12.50 மணியளவில், இனந்தெரியாத நபர்கள் இந்த பரபரப்பான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வீடும், கட்சி அலுவலகமும் அமைந்துள்ள கட்டிடமே இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடத்தின் முன் வாயில் பகுதியில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகின்றது. தீப்பற்றியதன் காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
