எந்த மொழியைப் பேசினாலும் எந்த மதத்தைப் பின்பற்றினாலும் அனைத்து பிரஜைகளும் கௌரவத்துடன் வாழக்கூடிய இனவாதமற்ற, தேசிய ஒருமைப்பாடு நிறைந்த வளமான நாட்டை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் உறுதியான நோக்கம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
தைப்பொங்கல் விழா பாரம்பரிய வரவேற்புடன் ஆரம்பமாகி, பல கலை மற்றும் கலாசார நிகழ்வுகளுடன் வர்ணமயமாக நடைபெற்றது.
தைப்பொங்கல் அனைவருக்கும் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் என குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய நிலையை விட எல்லா வகையிலும் முன்னேற்றமடைந்த நாட்டை உருவாக்கி, பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப அனைவரும் திடஉறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதியில், நாட்டின் வரலாற்றில் இனவாத மோதல்கள் குறைந்த ஒரு ஆண்டாக இது பதிவாகியுள்ளதாகவும், இனவாதத்தை ஊக்குவிக்கும் சக்திகள் பலவீனமடைந்து தேசிய ஒற்றுமைக்கான முயற்சிகள் வலுப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பணம் மற்றும் கட்டுமானங்கள் மட்டுமல்லாது, சமூக, கலாசார மற்றும் மனித வள அடிப்படையிலும் வளமான நாட்டை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் எங்கு பிறந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை பின்பற்றினாலும் அனைவரும் கௌரவமான பிரஜைகளாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்கு என தெரிவித்த ஜனாதிபதி, பல்வேறு கலாசாரங்கள் இணைந்து ஒரு நாட்டை அழகாக்கும் என்றும், அவற்றின் மதிப்பு மற்றும் அங்கீகாரமே மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் என்றும் கூறினார்.
பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கை நிலையை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான பொறுப்பு என தெரிவித்த அவர், நல்ல வீடுகள், தரமான கல்வி, சிறந்த சுகாதார சேவைகள், விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையின் மேம்பாடு, இளைஞர் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புகள் என்பன முன்னுரிமை பெறும் என உறுதியளித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை ஒருபோதும் வீழ்ச்சியடைய விடமாட்டோம் எனவும், இனவாதமற்ற தேசிய ஒற்றுமை மிக்க நாட்டை உறுதியாக உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அனைவரும் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பு என்பதை அரசாங்கம் நன்கு அறிவதாக தெரிவித்த அவர், அந்த அபிலாசைகளை நிறைவேற்ற எந்த தயக்கமும் இன்றி அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்றும் கூறினார்.
இந்த தைப்பொங்கல் தினத்தில் அனைவரும் ஒன்றுபட்டு, பிரிவுகளை தவிர்த்து, சிறந்த நாட்டை மக்களுக்காக உருவாக்க உறுதி எடுப்போம் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரையாற்றியபோது, வேலணை உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் தலைமையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் புதிய அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இந்த வட மாகாண தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

