2050ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘விண்ட்ஸ்கேப் மன்னார்’ காற்றாலை மின்நிலையம் இன்று (15) காலை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மின்வலையமைப்புடன் உத்தியோகப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
‘விண்ட்ஸ்கேப் மன்னார்’ திட்டத்தின் கீழ், இலங்கையின் மின்சார வரலாற்றில் முதன்முறையாக, தலா 5 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நான்கு காற்றாலைத் தூண்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம், வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய பெருமளவான வெளிநாட்டு நாணயம் நாட்டிற்குள்ளேயே தக்கவைக்கப்பட்டு, உள்நாட்டு பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
காற்றாலை மின்நிலையத்தின் திறப்பு நினைவுப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்ததுடன், காற்றாலைத் தூண்களை சேவையில் இணைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மின்சக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி, பிரதி மின்சக்தி அமைச்சர் அர்கம் இல்யாஸ், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கணேஸ்வரன், இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஷிர்லி குமார், இலங்கை நிலைத்துறைக் எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
