இலங்கை அரசால் சிங்கள குடியேற்றத்திற்குப் பிறகு
‘வெலிஓயா’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும்,
மணலாறு என்ற பெயர் தமிழர் வரலாற்றில்
‘இதய பூமி’ என அழைக்கப்பட்ட
ஒரு உயிர்ப்புள்ள அடையாளமாகவே நிற்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்த இந்தப் பழம்பெரும் கிராமம்,
நீர் வளம், நில வளம் என அனைத்துச் செழிப்புகளுடனும்
தமிழ் மக்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த
ஒரு செல்வச் செழிப்பான வாழ்வியலின் சின்னமாக இருந்தது.
வடக்கு–கிழக்கு மாகாணங்களை இணைக்கும்
உறவுப் பாலமாக விளங்கிய,
முற்றிலும் தமிழ் மணம் வீசிய
முல்லை மாவட்டத்தின் இதயமே மணலாறு.
ஆனால் 1949ஆம் ஆண்டு தொடக்கம்,
தமிழர் பிரதேசங்களை துண்டாடும் நோக்கில்
இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்ட
சிங்கள குடியேற்றத் திட்டத்தின் பலியாய்
இந்த வளமான பூமி மாறியது.
1980களில் தொடங்கி,
பட்டிக்குடியிருப்பு, ஒதியமலை போன்ற கிராமங்களில்
தமிழ் மக்களுக்கு எதிரான நெருக்குதல்கள்,
வேட்டைகள் ஆரம்பமானது.
1981–82 காலப்பகுதிகளில் ஒதியமலையில் தொடங்கிய
இந்தக் கொடூரங்கள்,
பின்னர் தென்னைமரவடி, கொக்கிளாய், முகத்துவாரம்,
கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் வரை
வேகமாகப் பரவின.
பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த
தமிழ் மக்களின் வீடுகள் எரியூட்டப்பட்டன.
வெளியேற மறுத்தவர்கள்
அவர்களின் இல்லங்களோடு சேர்த்து
சாம்பலாக்கப்பட்டனர்.
அதேபோல்,
மயிலங்குளம் → மொனறவெவ,
சூரியனாறு → கலம்பவெவ,
ஆமையன்குளம் → கிரபென்வெவ,
மண்கிண்டிமலை → ஜனகபுர,
உந்திராயன்குளம் (முந்திரியன்குளம்) → நெளும்வெவ,
மறிச்சுக்கட்டிகுளம் → குருளுவெவ என
தமிழ் கிராமங்களின் பெயர்களே திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
இன்று, மணலாறு முழுவதும் ‘வெலிஓயா’ என மாற்றப்பட்டு,
நவகஜபுர, கல்யாணபுர, எகெடுகஸ்வெவ, ஜனகபுர,
கிரிப்பன்வெவ, நிகவெவ இடது, நிகவெவ வலது,
கஜபாபுர என
ஒன்பது (09) கிராம சேவையாளர் பிரிவுகளில்
பல்லாயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள்
திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளன.
இந்தக் குடியேற்றங்களுக்காக,
கோட்டைக்கேணி பிள்ளையார் கோவிலடியிலிருந்து 815 ஏக்கர்
மற்றும் கொக்குத்தொடுவாயில் உள்ள
தமிழ் மக்களுக்குச் சொந்தமான 2,156 ஏக்கர் காணிகள்
அபகரித்து வழங்கப்பட்டன.
ஒருகாலத்தில்
100% தமிழர்களால் நிரம்பிய,
தமிழ் வாழ்வியலால் அலங்கரிக்கப்பட்ட கிராமம்,
இன்று முற்றுமுழுதாக அரசால் அபகரிக்கப்பட்டுள்ளது.
தாம் இழந்த தமது மண்ணை நினைத்து
கண்ணீர் வடிக்காத நாள்
மணலாறு மக்களுக்கு இல்லை.
மணலாறு – அது ஒரு கிராமம் மட்டும் அல்ல.
அது துண்டாடப்பட்ட ஒரு இனத்தின் இதயம்.
அழிக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சாட்சி.
‘நல்லிணக்கம்’ என்ற பெயரில்
தொடர்ந்து துண்டாடப்படும்
தமிழர் தாயகத்தின்
மௌனமாக்கப்பட்ட குரல் — மணலாறு.

