நாட்டின் பொருளாதார மையங்களின் முகாமைத்துவத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை ஒழுங்குபடுத்த தனி ஆணைக்கு ஒன்றை அமைக்க வேண்டும் என தேசிய விவசாய ஐக்கிய அமைப்பு கோரிக்வை விடுத்துள்ளது.
தற்போதைய நிர்வாகத்தில் சிக்கல்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், தனியார் முகாமைத்துவமானது விவசாயிகளின் சுயாதீனத்தையும் நியாயமான விலையையும் பாதிக்கும் அபாயம் உள்ளதாக அமைப்பு எச்சரித்துள்ளது.
அமைப்பின் தலைவர் அனுராதா தென்னக்கோன், பொருளாதார மையங்களை ஒழுங்குபடுத்தும் ஆணைக் குழு ஒன்றை அமைப்பதே தீர்வு என வலியுறுத்தி, எதிர்வரும் 7ஆம் தேதி அனைத்து மையங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி வர்த்தக அமைச்சுக்கு உத்தியோகப்ப்பூர்வ முன்மொழிவு சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவில் விவசாய சங்கங்களுடன் ஆலோசிக்கப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தபடி, தம்புள்ள, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பிட்டிப்பொல மற்றும் நாரஹென்பிட்டிய பொருளாதார மையங்கள் தேசிய விவசாய சந்தைப்படுத்தல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவத்திற்கு மாற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இம்மையங்களின் மாதாந்திர வருவாய்கள் அந்த நிறுவனத்திற்கே செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விவசாய அமைச்சு இந்த மாற்றத்திற்கு ஆதரவு அளித்து, விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் நியாயமான வர்த்தக சூழலை உறுதி செய்யவும், வர்த்தக நடைமுறைகளை ஒழுங்குபடுத்தவும், பொருளாதார மையங்களில் காணப்படும் ஒரே ஆதிக்கத்தை உடைக்கவும் இந்த நடவடிக்கை அவசியம் என பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.
