ஹோர்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவில் உயிரியல் வளங்களை சட்டவிரோதமாக சேகரித்ததாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தம்பதியரைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் சர்வதேச அளவிலான தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், சுற்றுச்சூழல் துறை நிறுவனங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளுடன் இணைந்து தேசிய பூங்காக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்ட உயிரியல் கடத்தல் வலையமைப்பு இருப்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், கைது செய்யப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் பெரிய சர்வதேச வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய கூடுதல் தகவல்கள் தேவைப்படுகின்றன என அவர் கூறினார்.
இதற்காக சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்புப் படைகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கைப்பற்றப்பட்ட பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகள் இலங்கைக்கு மட்டுமே சொந்தமான அல்லது அபாய நிலையில் உள்ள இனங்களைச் சேர்ந்தவையா என்பதைத் தீர்மானிப்பதற்காக தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் அறிக்கையை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை உயர்ந்த அளவிலான தனித்துவமான உயிரின வளத்தை கொண்ட நாடு என்பதால், அவற்றில் அரிய இனங்கள் இருக்கக்கூடும் என்ற சாத்தியமும் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
இந்த கைது நடவடிக்கை, ஹோர்டன் பிளெயின்ஸ் தேசிய பூங்காவில் பூச்சிகள் மற்றும் சிறிய விலங்குகளை சேகரித்து வைத்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வாரம் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
