ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
அமைச்சரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஆறாம் தர வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பு நடைமுறை அடுத்த ஆண்டு 2027 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய பாடத்திட்டத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக ஆறாம் தர மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்களில் கடும் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்துக்கான தயாரிப்புகளால், பழைய பாடத்திட்டத்துக்கு ஏற்ப பாடப்புத்தகங்கள் அச்சிடப்படாததன் விளைவாக, தற்போது வழங்கப்பட வேண்டிய புத்தகங்களில் சுமார் 40 சதவீதம் கிடைக்கவில்லை என சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால் நாடு முழுவதும் பல பாடசாலைகள் தேவையான பாடப்புத்தகங்களை பெற்றுக்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.
புதியதாக அச்சிடப்பட்ட ஆறாம் தர தொகுதிகள் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்பதால், பழைய பாடத்திட்டத்தின் புத்தகங்களையே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சில பாடசாலைகள் முன்பு பழைய பாடத்திட்டத்தில் கற்ற மாணவர்களிடமிருந்து புத்தகங்களை திரட்ட முயற்சிக்கலாம்.
எனினும், அது தேவையை பூர்த்தி செய்யாது என்றும், களஞ்சியங்களில் இருந்த பல புத்தகங்கள் ஏலத்தில் விற்கப்பட்டோ, அண்மைய வெள்ள அனர்த்தங்களால் சேதமடைந்தோ பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் சந்திப்பின்போதும் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தக பற்றாக்குறையை தீர்க்க கல்வி அமைச்சு அவசரமாக தலையிட வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
