பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த விவாத நிகழ்வுகளை ரத்து செய்துள்ளன.
தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
முதலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் நாமலை அழைத்திருந்த நிலையில், அங்கு திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கமும் நாமல் ராஜபக்ஷவுடனான விவாத நிகழ்வை ரத்து செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மாணவர்கள் அச்சமின்றி மற்றும் சுதந்திரமாக கேள்விகளை எழுப்பும் சூழல் காணப்படாத காரணத்தினாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒக்ஸ்போர்டு மாணவர் சங்கத்தின் தலைவர் கெத்தரின் யாங் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மாணவர்கள் நேரடி விவாதங்களில் பங்கேற்பதற்குப் பாதுகாப்பற்ற உணர்வை வெளிப்படுத்திய நிலையில், ஒருதலைப்பட்சமான விவாதத்திற்கு இடமளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவிற்கு இத்தகைய மேடைகளை வழங்குவது, கடந்த கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்கான அரசியல் மறுவாழ்வு முயற்சியாக அமையும் எனத் தெரிவித்து ‘தமிழ் சொலிடாரிட்டி’ உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
தற்போது பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ஷ, லண்டன் பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
