இலங்கையில் பல்வேறு கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பல் தலைவனான ஜனித் மதுஷங்க டி சில்வா எனப்படும் ‘பொடி லசி’, இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ள்ளார்.
இந்தியாவிற்குச் சென்றிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் பலத்த பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாக, கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தலைமறைவாகியிருந்த இவர், கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பொடி லசியை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபரினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க, தற்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
