மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் – 2026 நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடியில் உள்ள பாடசாலைகள் மற்றும் சமூக நிறுவனங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பல்வேறு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (30) காத்தான்குடி பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் நடைபெற்றது.
மெத்தைப் பள்ளி வித்தியாலயம், கரீப் நவாஸ் பவுன்டேஷன், பாத்திமா பாலிகா வித்தியாலயம், அன்வர் வித்தியாலயம் மற்றும் தாருஸ்ஸலாம் வித்தியாலயம் ஆகியவற்றின் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக குறித்த நிதி ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு வழங்கப்பட்ட வசதிகள் மூலம் மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறைக்கு முன்னுரிமை வழங்கி, பிரதேசத்தின் பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வில் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எஸ்.எம். சில்மியா, திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் ஹன்சுல் சிஹானா, நகர சபை உறுப்பினர்களான சட்டமாணி ஈ.எம். றுஸ்வின், சல்மா அமீர் ஹம்ஸா, பொறியியலாளர் ரியாஜ் முகமட் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


