இன்று (22) காலை 8 மணி முதல், அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) தொடங்கிய பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி, சேவைகளை வழமைப்படி வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த முடிவு, நேற்றைய இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஏற்பட்டது.
மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நடந்த சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே துரித விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. சங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு வாரத்திற்குள் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த தேவையான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரத் துறையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களுக்கும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சங்கம் கோரியுள்ளது.
இந்த இணக்கப்பாடுகள் காலத்திற்குள் நிறைவேற்றப்படாவிட்டால், சங்கம் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துமென எச்சரித்துள்ளது.
இதன் பேரில், இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் கதிரியக்க சேவைகள் வழமைப்படி நோயாளர்களுக்கு வழங்கப்படும். நேற்றைய போராட்டத்தால் நோயாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.
