இலங்கை ரயில்வே நிலைய மேற்பார்வையாளர்கள் சங்கம் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதியிலிருந்து தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்படாததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில்வே நிலைய மேற்பார்வையாளர்களுக்கான பணியமர்த்தல் நடைமுறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசுப் பணிச்சேவை ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதில் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படாமல் தாமதம் செய்யப்பட்டுள்ளதாக சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஆணைக்குழு அனுமதி பெறாத சில மாற்றங்கள் நடைமுறையில் சேர்க்கப்பட்டதால் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலைய மேற்பார்வையாளர்கள் கடும் அநீதியை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்தத் தீர்வும் வழங்கப்படாததால், எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
