சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தேசிய ரீதியிலான மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
இன்று பெரும்பாலான பெற்றோர்கள் சமூக ஊடகங்களால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்குக் காரணியாக அமையும் தொழில்நுட்பத்தை முழுமையாகத் தடை செய்வது தீர்வாகாது எனக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், சமூக ஊடகங்கள் ஊடாகக் கல்வி மற்றும் ஆக்கத்திறன் சார்ந்த நன்மைகள் கிடைப்பதையும் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பாதுகாப்பற்ற இணையச் சூழலால் சிறுவர்களின் தூக்கம், கல்வி மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதோடு, சில சந்தர்ப்பங்களில் இது முரண்பாடுகளுக்கும் மன அழுத்தத்திற்கும் வழிவகுப்பதாக அவர் கவலை வெளியிட்டார்.
இணைய வழித் துன்புறுத்தல்கள் வயதுக்கு மீறிய வன்முறை மற்றும் பாலியல் ரீதியான பதிவுகள் சிறுவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்றன.
குறிப்பாக, சில இணைய விளையாட்டுகள் பிள்ளைகளின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சிறுவர்களின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வது தற்போது தேசிய முன்னுரிமைப் பணியாக மாறியுள்ளது.
இவ்வேலைத்திட்டமானது மூன்று முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் அமையும் எனப் பிரதி அமைச்சர் விளக்கினார்.
முதலாவதாகச் சிறுவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல், இரண்டாவதாக ஆய்வுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்தல் மற்றும் மூன்றாவதாகத் தனிநபர் உரிமைகளை மதித்து பாதுகாப்புக்கும் புத்தாக்கத்திற்கும் இடையிலான சமநிலையைப் பேணுதல் ஆகியனவாகும்.
சர்வதேச நாடுகளின் அனுபவங்களைப் பெற்று இலங்கைக்குப் பொருத்தமான வகையில் இந்த வேலைத்திட்டம் அமையும்.
இதில் சிறுவர் பாதுகாப்பு, சுகாதாரம், சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிபுணர்கள் மட்டுமன்றி, இளைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படவுள்ளன.
இச்சவாலை வெற்றிகொள்ள அரசாங்கத்துடன் இணைந்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் எனப் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மேலும் கேட்டுக்கொண்டார்.
