1996ஆம் ஆண்டு, திருகோணமலை (Trincomalee) குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 30 ஆண்டுகளாகின்றன.
வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்தனர்.
எனினும், அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை. சந்திரிக்கா குமாரதுங்க நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்த காலத்திலேயே மேற்படி குமாரபுரம் படுகொலை இடம்பெற்றிருந்தது.
நேற்றைய தினம் (11.02.2026) காலை 10.00 மணியளவில் குமாரபுரம் கிராமத்தில் கடந்த 11.02.1996 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் நினைவேந்தல் திருகோணமலை குமாரபுரத்தில் அமைக்கப்பட்ட நினைவேந்தல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நினைவேந்தலில் பாதிக்கப்பட்ட மக்கள், மனித உரிமை செயற்ப்பாட்டார்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டு நினைவஞசலி செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது.
குறித்த நினைவேந்தலில் பாதிக்கப்பட்டவர்களால் “உள்ளக நீதிப் பொறி முறையில் நம்பிக்கை இல்லை” சர்வதேச நீதிப் பொறி முறை ஊடாகவே குமாரபுரம் படுகொலைக்கு நீதி வேண்டும்” என வலியுறுத்தி சர்வதேச நாடுகளுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்ட்து.



