ஜெனவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான பூர்வாங்கக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் புதிய ‘அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை’ உருவாக்குவதற்கான பொதுமக்களின் ஆலோசனைகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்துப் பேரவையில் விளக்கமளித்த அவர், வெளித்தரப்புத் தலையீடுகளைத் தவிர்த்து, உள்நாட்டுப் பொறிமுறைகள் ஊடாகவே நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் பரஸ்பர மரியாதையுடனும், பங்காளித்துவ உணர்வுடனும் இணைந்து செயற்பட இலங்கைத் தயாராக இருப்பதாகவும் தூதுவர் சுமித் தசநாயக்க இதன்போது மீள உறுதிப்படுத்தியுள்ளார்.
