தொடர்ச்சியாக நடைபெறும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம், 5 மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில் 38.76 கோடி ரூபா ( இந்திய பெறுமதி) செலவில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தலைமைச் செயலர் ந.முருகானந்தம் பங்கேற்றனர்.
2021 ஆகஸ்ட் மாதத்தில் சட்டமன்றத்தில் நடைமுறையில் உள்ள விதி 110ன் கீழ், 26 மாவட்டங்களில் உள்ள 67 இலங்கைத் தமிழர் முகாம்களில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதார தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் பழைய வீடுகளைப் பழுது பார்க்கும் வேலைகளும் அடங்கும் என அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வீடுகள், விழுப்புரம், திருப்பூர், சேலம், தர்மபுரி மற்றும் விருதுநகர் மாவட்ட முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.
கூடுதலாக, இந்த முகாம்களில் சாலை வசதி, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த 7.33 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மறுவாழ்வு திட்டத்தின் முதல் கட்டமாக, 18 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் மொத்தம் 3,510 வீடுகளை 180.34 கோடி செலவில் கட்டும் பணிக்கு அரசு உத்தரவு பிறப்பித்து, பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தது.
