புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி கலந்துரையாட திட்டமிட்டுள்ளது
புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் பாராளுமன்ற உறுபப்pனர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்கிழமை (07) பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டதுடன், அதுபற்றி தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் பேசப்பட்டது.
அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது.
இச்சந்திப்பை எங்கு நடாத்துவது என இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.