முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பிரதீப் ஹெட்டியாராச்சி, பிரதீப் அபேரத்ன மற்றும் மஹேன் வீரமன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
இந்த வழக்கின் அடிப்படையான தலா 14,000 கேரம் பலகைகள் மற்றும் செக்கர்ஸ் பலகைகள் இறக்குமதி செய்து விநியோகித்தமை தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தம்மீது நான்கு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவர் அங்கு தெரிவித்தார்.
இந்த கேரம் பலகைகள் மற்றும் செக்கர்ஸ் பலகைகள் இறக்குமதியானது சதொச ஊடாக இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர், இந்த பொருட்கள் விளையாட்டு அமைச்சின் களஞ்சியசாலைகளில் வைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
அதனடிப்படையில், குறித்த விளையாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை எனவும், அந்த பொருட்களின் இறக்குமதியானது சதொச நிறுவனம் ஊடாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்> இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி தோற்கடிக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியைக் கட்டியெழுப்ப தாம் கடுமையாக உழைத்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்படி, கூட்டு எதிரணியின் கூட்டங்களை நாடளாவிய ரீதியில் நடாத்துவதற்கு பங்களித்தமையால் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தமக்கு எதிராக 7 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகளில் இருந்து தாம் விடுவிக்கப்பட்டதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் தெரிவித்தார்.
தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையை டிசம்பர் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[…] […]