Monday, January 6, 2025
Homeவிளையாட்டுஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நிலைகுலைந்தது இந்திய அணி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நிலைகுலைந்தது இந்திய அணி

சிட்னி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான தீர்மானம் மிக்க ஐந்தாவதும் கடைசியுமான போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியாவை அதன் முதல் இன்னிங்ஸில் 185 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியா கட்டுப்படுத்தியது.

வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாள் ஆட்டத்தில் 194 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்ட 11 விக்கெட்களில் ஒரு விக்கெட் மாத்திரமே சுழல்பந்துவீச்சாளருக்கு சொந்தமானது.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிய இந்தியாவின் வழமையான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா இந்தப் போட்டியிலிருந்து தானாகவே விலகிக்கொண்ட நிலையில், அணித் தலைமைப் பதவி ஜஸ்ப்ரிட் பும்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேர்த் விளையாட்டரங்கில் அவுஸ்திரேலியாவை இந்தியா வெற்றிகொண்ட முதலாவது டெஸ்ட் போட்டியிலும் பும்ராதான் அணித் தலைவராக விளையாடியிருந்தார்.

அத்துடன் ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக அணியில் {ப்மான் கில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.

இப் போட்டியில் பும்ரா துடுப்பாட்டத்தை முதலில் தெரிவு செய்தார்.

ஆனால். அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் மிகத் துல்லியமாக பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களை ஆட்டம் இழக்கச் செய்தனர்.

இந்திய துடுப்பாட்டத்தில் நால்வரே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

ஸ்கொட் போலண்ட் 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்களையும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
மற்றைய விக்கெட்டை சுழல்பந்துவீச்சாளர் நேதன் லயன் கைப்பற்றினார்.

இப் போட்டியில் இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

கே.எல். ராகுல் (4), யஷஸ்வி ஜய்ஸ்வால் (10), {ப்மான் கில் (20) விராத் கோஹ்லி (17) ஆகிய முன்வரிசை வீரர்கள் நால்வரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (72 – 4 விக்.)

இந் நிலையில் ரிஷாப் பான்ட், ரவிந்த்ர ஜடேஜா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர்.

 

அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது பான்ட் 40 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

இந்த இணைப்பாட்டமே இந்திய இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

நிட்டிஷ் குமார் ரெட்டி, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டைத் தாரைவார்த்தார்.

தொடர்ந்து ரவிந்த்ர ஜடேஜா 26 ஓட்டங்களுடனும் வொஷிங்டன் சுந்தர் 14 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

பின்வரிசையில் ஜஸ்ப்ரிட் பும்ரா திறமையாகத் துடுப்பெடுத்தாடி 22 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஸ்கொட் போலண்ட் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

சாம் கொண்டாஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 7 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments