எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாத அளவில் உண்மையின் நிழலை படமாக்கியிருக்கின்றார்கள்
முள்ளிவாய்க்காலில் பற்றிப் படர்ந்த தீயாக இதயத்தைச் சுட்டெரிப்பதாக நேற்று பார்த்த ஒருவரின் கண்களில் வழிந்த கண்ணீர் சாட்சியம் சொல்லியது!
தாய் மண்ணில் விதையுண்டவர் கனவைச் சுமக்க வேண்டிய தமிழினம் இன்று இனவுணர்வின்றிச் சிதையுண்டிருக்கும் காலத்தில் மறத் தமிழன் மரத்துப்போகாமலிருக்கவும் மறக்காமலிருக்கவும் இது போன்ற ஆவணப்படங்கள் மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் மனச்சாட்சியையும் தட்டி எழுப்பும் என திரைப்படத்தை பார்த்த மற்றொரு நண்பர் சொன்னார்
இவை போன்ற ஆவணப்படுத்தல்கள் இன்னும்… இன்னும்… கலைப் படைப்புகளாகவும், திரைப்படைப்புகளாகவும், இலக்கியப்படைப்புகளாகவும் வெளிவரவேண்டுமென படத்தைப்பார்த்தவர் கண்ணீருடன் சொல்லி சென்றாhர்.
இயக்குனர் தனேஷ் கோபால், வைத்தியர் வரதராஜா மற்றும் நடந்த உண்மைக்கு உயிர் கொடுத்து நடிப்பின்றி வாழ்ந்த கலைஞர் குழாமிற்கும் தொழில்நுட்பவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
நம்நாட்டு வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய படைப்பு எனலாம்
பலரது பாராட்டை பெற்ற பொய்யா விளக்கு பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்வுக்குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நடிகர் நாசர், இயக்குனர் வெற்றி மாறன், ராம் போன்றவர்களுடன் உலக சினிமா வல்லுனர்களும் அங்கம் வகிக்கின்றாhர்கள்
‘பொய்யாவிளக்கு’ திரைப்படம் ஒன்றரை மணிநேரம் விறுவிறுப்பாக சர்வதேச தரத்தோடு பயணிக்கும் ஈழ தமிழர்களிள் வலிதாங்கிய ஆவணப்படமாகும்
இரண்டாம் உலக போரின் யூத இனமக்களின் கதைகள் பல ஹொலிவூட் திரைப்படங்களாக வெளிவந்திருந்தன.
அந்த அளவில் இல்லாவிட்டாலும் அதற்கு அண்மித்த வகையிலும் கூட எம்மவர்களின் வலியினை ஏனைய சமூகங்களுக்கு சொல்லும் அளவில் நம்மவர்கள் தயாரிக்க தவறிவிட்டார்கள் என்று சொல்வதே யதார்த்தம் ஆகும்.
ஆயினும் இதுவரை வெளிவந்த எம்மவர்களின் வலியினை சொல்லும் ஆவணப்படங்களில் இயக்குனர் தனேஷ் கோபாலின் வகிபங்கினை பாராட்டியே ஆக வேண்டும். வாழ்த்துக்கள் இயக்குனர்
பொய்யாவிளக்கு முதல் பாதியில் ஆங்கில படங்களையொத்த ; அமெரிக்க நகரின் வாழ்வியலில் ஆரம்பிக்கும் காட்சிகள், பின்னர் வேகமெடுத்து இலங்கையின் வதை முகாமாக கருதப்படும் நாலாம் மாடிக்கு செல்கின்றது
பின் கதை பின்னோக்கி நகர்ந்து வன்னி மண்ணை பார்வையாளர்களின் கண்களிலும் மனங்களிலும் இருத்துகின்றது.
அடுத்து தமிழின அழிப்பின் நேரடி சாட்சியான வைத்திய கலாநிதி வரதராசாவின் வாழக்கையை திரையில் தேவையான வேகத்தோடும் விறுவிறுப்புடனும் கொண்டு செல்கின்றது.
வைத்தியரின் நடிப்பு இயல்பாக இருக்கின்றது. அவர் நேரடியாக பார்த்ததாலோ அல்லது அவருக்குள் இருந்த சிறந்த நடிகன் வெளிப்பட்டிருக்கின்றான என கணிக்க முடியாத அளவில் இருக்கின்றது. வாழ்த்துகள் வைத்திய கலாநிதி வரதராசா அவர்களே
தமிழர்களின் வலிமிகுந்த உண்மை கதையினை அதன் உண்மைத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாமலும் அதேவேளை உண்மையில் நடந்த படு பயங்கர அகோரமான காட்சிகளை சிறுவர்களும் பார்க்கும் விதத்தில் பொய்யா விளக்கு ஆவண திரைப்படத்தை படைத்த கலைஞர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.
வாழ்த்துகள் உறவுகளே.
ஒவ்வொரு தமிழனும் பார்ப்பதுடன் உங்களின் அடுத்த சந்ததியையும் பார்க்க வைப்பதுடன் உங்களின் ஏனைய சமூக நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.