உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பித்தார்.
பாராளுமன்றத்தில் (09) நடைபெற்ற அமர்வின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தலின் போது சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து, அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக் கோருவதற்காகவும், தேர்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் அதனோடு தொடர்புப்பட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை 2023 .03.09 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில் நிதி நெருக்கடி காரணமாக காலவரையறையின்றி பிற்போப்பட்டது.
இவ்வாறான நிலையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உடனடியாக தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியிருந்தது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்புமனுக்களுக்கு அமைய தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது ஆகவே மீண்டும் வேட்புமனுக்களை கோருமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய புதிதாக வேட்புமனுக்களை கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்து,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் குறித்த சட்டமூலத்தை முதலாம் வாசிப்புக்கு சமர்ப்பித்துள்ளது.