வடக்கு – கிழக்கு இணைந்த ஒரு மாநிலமாக தமிழ் மக்கள் சுயாட்சியுடன் வாழக்கூடிய அரசியலமைப்பை புதிய அரசாங்கம் உருவாக்க வேண்டும்.
அத்துடன் மகாணசபை தேர்தலை விரைவாக நடத்தி அதற்கான அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும் எனவும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று காலை முதல் மாலை வரை இடம்பெற்றது.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இரண்டு தடவை இணைய வழி ஊடாக பேசியுள்ளோம்.
இன்றைய கூட்டத்தில் வரவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பேசினோம்.
அத்துடன் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியை கிராம மட்டங்களில் பலப்படுத்தல் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
முக்கியமாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியாக தற்போது அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் போட்டியிடும்.
அத்துடன் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடனும் பேசி அவர்களும் இணங்கும் பட்சத்தில் இணைந்து போட்டியிடவுள்ளோம்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் அங்கம் வகிக்கின்ற தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பில் பேசுவதாகவும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி முதலாவது வாரத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் மாநாட்டை வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளோம்.
அதற்கு முன்னதாக மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் கூடி என்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் எனவும் தீர்மானிப்பார்கள்.
அதற்கான நடவடிக்கைகள் உடனடியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய ஒரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டி தேவையும் பொறுப்பும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இருக்கிறது.
தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் என்பது சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும என்பதில் நாம் ஆணித்தரமான கருத்துக்களை கொண்டிருக்கின்றோம்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கக் கூடிய புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.
புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை உருவாக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்கள்.
நிர்வாகத்தில் மாற்றம்.
அரசியலில் மாற்றம். ஊழல் இல்லாத நிர்வாகத்தை ஏற்படுத்துவது என பல விடயங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சனையை தீர்க்கக் கூடிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது எம் மக்களது கருத்தாக இருக்கிறது.
ஆகவே, தமிழ் மக்கள் மத்தியில் 75 வருடமாக தேசிய இனப்பிரச்சனை புரையோடிப் போயுள்ள பிரச்சனையாக இருக்கிறது.
அது தீர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு புதிய அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மிடம் இருக்கிறது.
கடந்த 7 வருடங்களாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை.
மாகாணசபை தேர்தல் என்பது இந்த வருட இறுதியில் நடத்தப்படும் என கூறுகிறார்கள்.
தாமதமாக நடநத்த வேண்டும் என்ற தேவை இருக்கா அல்லது அதற்கு முன்பு நடத்தலாமா போன்ற கருத்துக்கள் எம் மத்தியில் பேசப்பட்டது.
உள்ளூராட்சி தேர்தல் நடந்து முடிந்து ஓரிரு மாதங்களில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம்.
மாகாணசபைக்கு உரித்தான 1988 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைதது அதிகாரங்களும் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கம் மிக விரைவாக அந்த நடவடிக்கைகளை எடுத்தால் மாத்திரம் தான் தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்படும் எனவும் நாம் கருதுகின்றோம்.
ஆகவே, அரசாங்கம் வெறுமனே பேச்சில் மாத்திம் இருக்காமல் தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கு ஒரு புதிய அரசியல் சாசனம் கொண்டு வரப்பட வேண்டும்.
அது வெறுமனே சிங்கள மக்களது பிரச்சனையை தீர்ப்பதாக இல்லாது புரையோடிப் போயுள்ள தமிழ் மக்களது தேசிய இனப் பிரச்சனையை தீர்கக் கூடியதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், கோ.கருணாகரம், எம்.கே.சிவாஜிலிங்கம், ந.சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் ப.வேந்தன், பவான் உட்பட முக்கிஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதையும் படியுங்கள்>யாழ்.தென்மராட்சியில் சுண்ணக்கல் அகழப்படும் இடங்களை பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர்!