முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு வீட்டின் முன்னாள் கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்
இந்த சம்பவம் தொடர்பாக சிஜடியினரால் கொலை குற்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் வாகன சாரதி ஒருவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (03) உத்தரவிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21 ம் திகதி முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் வீட்டிற்கு முன்னால், அமைச்சரின் மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய்பாதுகாப்பு உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்
உயிரிழந்தவரின் பெற்றோரும் இந்த வழக்கினை குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றறத்தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவரை கொலை குற்றத்தின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் நேற்று (02) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று சிஜடியினர் முன்நகர்வு பத்திரம் தாக்கல் செய்து ஆஜர்படுத்தியதையடுத்து வழக்கு விசாரணையை எடுத்துக் கொண்ட நீதவான் அவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.