Monday, December 23, 2024
Homeஇந்தியாஇளையராஜா ஒரு இசை கடவுள் நடிகை கஸ்தூரி

இளையராஜா ஒரு இசை கடவுள் நடிகை கஸ்தூரி

அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை- கஸ்தூரி
மார்கழி மாத பிறப்பையொட்டி திவ்ய பாசுரம் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார்.

அத்துடன் நிகழ்ச்சிக்கு சடகோபர் ராமானுஜ ஜீயர், ஸ்ரீராமன் நாராயண ராமானுஜ ஜீயர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளையராஜாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து ஆண்டாள் சன்னதி, நந்தவனம், பெரிய பெருமாள் சன்னதிகளில் இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, ஆண்டாள் கோவிலில் கருவறைக்கு முன்புள்ள மண்டபத்தில் இளையராஜா நுழைந்த போது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அதனால் அர்த்த மண்டப படியின் அருகே நின்றவாறே சாமி தரிசனம் செய்ததாகவும், கோவில் மரியாதையை இளையராஜா ஏற்றதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

அவரது பதிவில், ‘என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை.

நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள்.

இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே தனக்கு ஆதரவளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்க, கமலாலயம் வந்த நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ‘இளையராஜா ஒரு இசை கடவுள்.

அவர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை.
அவரை கோயிலுக்குள் விடவில்லை என்று வரும் சர்ச்சையை வன்மையாக கண்டிக்கிறேன்.

இப்படிப்பட்ட பிரச்சாரங்களை வைத்து இன்னும் எவ்வளவு நாட்கள் தான் இந்த நாட்டில் ஏமாற்றுவார்கள்.

கருவறைக்குள் எந்த ஜாதியினரும் நுழைய முடியாது.
பிராமணர்களாய் இருந்தாலும் கருவறைக்குள் செல்ல முடியாது.
அர்ச்சகர்கள் மட்டும்தான் கருவறைக்குள் செல்ல முடியும்.
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்.

அர்ச்சகர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் கருவறைக்குள் நுழைய முடியும்.
ஆனால் இளையராஜா கருவறைக்குள் செல்வதற்கு முயற்சி செய்யவே இல்லை. உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும் இங்கே நில்லுங்கள் என்று சொல்கிறார்கள்.
அவரும் அங்கே நிற்கிறார். இதுதான் நடந்தது’ என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments