போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது.
உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.
தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும்.
அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும்.
அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார்.
அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியல் என்பது குறிப்பிடத்தக்கது