Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை - காணாமலாக்கப்பட்ட உறவினர்கள்

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை – காணாமலாக்கப்பட்ட உறவினர்கள்

இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரம், வட்டுவாகல், தேவிபுரம், ஓமந்தை ஆகிய நான்கு இடங்களில் எமது உறவுகள் சரணடைந்தபோது கடமையில் இருந்த படை அதிகாரிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முதற்கட்டமாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சுவிட்சர்லாந்தின் இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லினிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் இரண்டு நாட்கள் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது நேற்று முன்தினம் மாலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை கிளிநொச்சியில் சந்தித்து உரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பில் சுவிட்சர்லாந்தின் உதவி இராஜாங்க துணைச் செயலாளருடன் இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் தூதுவர் கலாநிதி சிறிவொல்ட், மனிதப் பாதுகாப்புக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் போலியட், தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கான சிரேஷ்ட அதிகாரி சுசந்தி கோபால கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி, செயலாளார் லீலா தேவி உட்பட எட்டு மாவட்டங்களின் தலைவிகள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் புதிய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் உறவுகளின் நிலைப்பாடு தொடர்பில் கேள்விகளை தொடுத்திருந்தார்.

இச்சமயத்தில், போரின் பின்னரான 15 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கரிசனைகளைக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென அவர்கள் தெரிவித்தனர்

சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்காகவுமே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றி அலுவலகத்தினை அரசாங்கம் ஸ்தாபித்தது. அதில் ஒரு சம்பவத்தினைக் கூட முறையாக விசாரணைனக்கு உட்படுத்தவில்லை. வெறுமனே காணாலாக்கப்பட்டவர்களின் உறவிர்களுக்கு மாதந்த கொடுப்பனவுகளை வழங்கி இறப்புச் சான்றிதழை வழங்குவதற்கே அந்த அலுவலகம் முனைந்தது என அவர்கள் மேலும் தொவித்துள்ளனர்

இதன் காரணமாக புதிய அரசாங்கத்தின் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லாத நிலைமையே காணப்படுகிறது.

எம்மைப் பொறுத்தவரையில், புதிய அரசாங்கம் ஊழல் ஒழிப்பு, முறைமை மாற்றம் பற்றிய பல விடயங்கள் பற்றி வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

ஆகவே அவற்றை அமுலாக்கவதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கும் அதேநேரம், விசேடமாக, பாதிக்கப்பட்ட எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக, சில விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

விசேடமாக, இறுதிப்போரின்போது எமது உறவுகள் வட்டுவாகல், ஆனந்தபுரம், தேவிபுரம், மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில் சரணடைந்தார்கள். அவர்கள் தற்போது வரையில் எங்கே சென்றுள்ளார்கள் என்பது எமக்குத் தெரியாது. ஆனால் அக்காலத்தில் இந்த நான்கு பகுதிகளிலும் கடமையாற்றிய படை அதிகாரிகள் தற்போதும் உள்ளார்கள். அதில் சிலர் உயர் பதவிகளிலும் உள்ளார்கள்.

ஆகவே நாம் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பதாக இருந்தால் குறித்த அதிகாரிகள் மீது பகிரங்கமான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.
அவ்வாறான விசாரணையை முன்னெடுப்பதன் ஊடாக அரசாங்கம் எமக்கான நீதியை நிலைநாட்டுவதற்கு முனைகிறது என்ற நிலைப்பாட்டை எம்மால் கொள்ள முடியும் என காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சுவிட்சர்லாந்தின் இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லினிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments