ஏதாவது முக்கிய விடயங்கள் என்றால் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சத்தியலிங்கத்திற்கு சுகயீனம் ஏற்பட்டுவிடும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உதயன் பத்திரிகையின் உரிமையாளருமான சரவணபவன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அவருக்கு கையெழுத்திட விருப்பம் இருக்காது என ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிவஞானம் சிறிதரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் தமிழரசுக் கட்சியின் விளக்கத்திற்கு அவர் பதில் கொடுக்க வேண்டும்.
கட்சியின் மத்திய குழு விரும்பினால் சிறீதரனை வைத்திருக்கலாம்.
அல்லது கட்சியின் தீர்மானத்தை மீறி விட்டதாக கூறி கட்சியில் இருந்து நீக்கப்படலாம்.
இவ்வாறு நீக்கப்பட்டால் சிறீதரன் வெற்றி பெற்றாலும் ஒரு மாதத்தில் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்படும்.
அதுமட்டுமல்ல சிறீதரன் மூலமாக காட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் ஊடாக கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனம் கிடைத்தால் அதன் ஊடாக சுமந்திரனே பாராளுமன்றம் செல்வார் என சரவணபவன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆகையால் சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வார் சிறீதரன் நாடாளுமன்றம் செல்ல மாட்டார்.
இலங்கை தமிழரசு கட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளும் மக்களுக்கு உதவாத செயற்பாடுகளாகவே காணப்படுகின்றன என அவர் குற்றம் சுத்தியுள்ளார்.