கடந்த காலங்களில் நாட்டில் உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அவைத்தலைவர் காரியாலயத்தில் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று (08) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகவும் பயனற்ற முறையிலும் செயற்படுத்தப்பட்டது.
எனவே, புதிய அரசாங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்படும் தடைகள் தொடர்பில் ஆராய்ந்து விசாரணைகளை நடத்தவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.