கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (06) யாழ் பல்கலைக்கழக முன்றலில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றித் தலைவர் கு.துவாரகன் மற்றும் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் ஆகியோரால் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட போராட்டத்தில் அனைத்துப்பீடங்களினதும் மாணவர் ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்பமிட்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்தனர்.
கையெழுத்துப் போராட்டத்திற்கு தலைமையேற்று கருத்துரையாற்றிய போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் மேலுள்ளவாறு தெரிவித்துள்ளார்.