வெளிநாட்டு மோகத்தில் முகவர்களை நம்பிய யாழ் இளைஞர்கள் சிலர் ரஷ்ய படையில் கட்டாயமாக இணைக்கப்ட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைக்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
முகவர்களுக்கு பணம் கொடுத்து இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாங்கள் முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம்.
தற்போது ரஷ்யாவின் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளோம்.
நாங்கள் போர் நடைபெறும் எல்லைக்கு அருகில் தான் உள்ளோம்.
எம்முடன் பாலச்சந்திரன் என்பவரும் உள்ளார்.
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் தற்போதும் இருக்கிறோம்.
எங்களுடன் இருந்த 19 இலங்கையர்களில் 3 பேர் இறந்துவிட்டார்கள். ஒருவரைக் காணவில்லை.
தயவு செய்து எம்மை மீண்டும் இலங்கைக்கே செல்வதற்கு யாராவது நடவடிக்கைகளை எடுங்கள் என உருக்கமாக வேண்டியுள்ளனர்
முன்னதாக, குறித்த இளைஞர்களின் உறவினர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு மேற்படி விடயம் சம்பந்தமாக எடுத்துரைத்தபோது, ரஷ்யா இலங்கையில் இருந்து எவரையும் போருக்காக இணைத்துக்கொள்ளவில்லை என்றே பதிலளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகரோ அல்லது ஏனைய ஜேவிபியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களோ இது வரையில் வாய் திறக்கிவ்லலையென்பது குறிப்பிடத்தக்கது