வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்
தற்போது ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பணியாற்றிவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர்இவ்வாறு தெரிவித்துள்ளார்
அத்தோடு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார்.
ஐநாவில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலக,
2015 – 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது அவரது இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது
பாதிக்கப்பட்ட பெண்ணான பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற செயன்முறையில் ஹிமாலி அருணதிலக உரியவாறு பங்கேற்காததன் காரணமாகவும் அவர் மேலும் 117,000 டொலரை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்தவேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தமை குறிப்பித்தக்கது.