அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய குழாத்தில் இடம்பெற்ற 38 வயதான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது ஓய்வு குறித்து திடீரென அறிவித்துள்ளமை கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்துவகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிறிஸ்பேனில் புதன்கிழமை (18) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த சற்று நேரத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
போட்டி முடிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் ரோஹித் ஷர்மாவுடன் பிரசன்னமான ரவிச்சந்திரன் அஷ்வின் தனது முடிவை வெளியிட்டார்.
அடிலெய்டில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அஷ்வின், 287 மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 765 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 106 போட்டிகளில் 537 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அஷ்வின், இந்தியா சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியுள்ள அனில் கும்ப்ளேக்கு (610 விக்கெட்கள்) அடுத்ததாக இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அத்துடன் 116 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 156 விக்கெட்களையும் 65 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 72 விக்கெட்களையும் அஷ்வின் கைப்பற்றியள்ளார்.
பிறிஸ்பேனில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தனது ஓய்வு குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஷ்வின்,
‘அனைத்துவகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இது எனது கடைசி நாளாகும்.
ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் ஏதோ ஒரு விசை இருப்பதை உணர்கிறேன்.
ஆனால் அதனை கழக மட்ட கிரிக்கெட்டில் மாத்திரம் வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.
ஆனால், சர்வதேச அரங்கில் இது எனது கடைசி நாள் என்பதுடன் அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருந்தேன்.
‘கடந்த சில வருடங்களில் சில வீரர்களை இழந்துள்ள (ஓய்வுபெற்றவர்கள்) போதிலும் ரோஹித் உட்பட ஏனைய எனது சக வீரர்களுடன் நிறைய நினைவுகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன்.
பழைய தலைமுறையினரில் நாங்கள் கடைசி குழுவாக இருக்கிறோம்.
சர்வதேச மட்டத்தில் விளையாடிய நிலையில் இன்றைய நாளை நான் நினைவில் குறித்துக்கொள்வேன்.
‘எத்தனையோ பேருக்கு நான் நன்றி கூற வேண்டியுள்ளது.
ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அதிகாரிகள், சக வீர்கள் ஆகியோருக்கு நன்றி கூறாமல் விட்டால் எனது கடைமையில் நான் தவறியவனாகிவிடுவேன்.
சிலரை பெயர் சொல்லி குறிப்பிட விரும்புகிறேன்.
‘எனது பயணத்தில் பங்காளிகளாக இருந்த சகல பயிற்றுநர்களுக்கும் நன்றி கூற கடைமைப்பட்டுள்ளேன்.
மிக முக்கியமாக ரோஹித், விராத், அஜின்கியா, புஜாரா ஆகியோர் எடுத்த பிடிகளால் கடந்த சில வருடங்களில் எனது விக்கெட்களின் எண்ணிக்கை அதிகரித்தன’ என தெரிவிவத்துள்ளார்.
‘ஊடகவியலாளர்களுக்கும் எனது நன்றிகள். நீங்கள் நல்லவற்றை எழுதிய அதேவேளை சில சந்தர்ப்பங்களில் மோசமான விடயங்களையும் எழுதுகிறீர்கள்.
அந்த உறவானது எப்போதும் பேணப்படும் என நான் கருதுகிறேன்.
நீங்கள் வழங்கிவரும் அதே அளவு ஆதரவை எதிர்கால கிரிக்கெட் வீரர்களும் பெறுவார்கள் என நம்புகிறேன்’ என அஷ்வின் தெரிவித்தார்.
‘ஒரு கிரிக்கெட் (சர்வதேச) வீரராக நான் அதை இப்போது நிறுத்திவிட்டேன்.
இந்த விளையாட்டு எனக்கு சகலவற்றையும் கொடுத்துள்ளதால் நான் இவ்விளையாட்டில் ஈடுபடலாம் எனக் அவர் கூறி நிறைவு செய்துள்ளார்.
இதையும் படியுங்கள்>வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.
https://www.youtube.com/@pathivunews