வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது.
பருவ மழை மற்றும் சீரற்ற காலநிலையால் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று (08) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதன்போது டயர்கள், சிரட்டைகள், வெற்றுப் போத்தல்கள் என்பவை பல இடங்களில் காணப்பட்டதுடன், அந்த பொருட்களுக்குள் நீர் தேங்கி நுளம்பு குடம்பிகளும் இனங்காணப்பட்டன.
நுளம்பு குடம்பிகள் உருவாகுமளவு சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஆகியோருக்கு எதிராக பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேவேளை, டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அவற்றை சூழவுள்ள பகுதிகளை நுளம்புகள் பெருகாத வண்ணம் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.