Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்மாவீரர் நாள் கையேடு..!

மாவீரர் நாள் கையேடு..!

மாவீரர் பணிமனையால் வெளியிடப்பட்ட மாவீரர் நாள் கையேடானது நிகழ்வுகள் நடைபெறவேண்டிய ஒழுங்குகளை விபரிக்கின்றது.
அதில் குறிப்பிட்டவாறு நிகழ்வு ஒழுங்குகள் வருமாறு:
பொதுச்சுடர், தேசிய கொடியேற்றல், ஈகைச்சுடர், மலர்வணக்கம், அகவணக்கம், உறுதியுரை, நினைவுரை
மாவீரர் நாள் (நவம்பர் 27)
மாவீரர் தேச விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தும், எதிரி பாசறையை வெடிகுண்டுகொண்டு தகர்த்தும் சத்திய வேள்வியில் நித்தமும் வேகி கொடியது பறந்திட உயிரினை ஈய்ந்து உடலை உரமிட்டு செங்குருதியால் வரலாறு படைத்து தமிழீழ மண்ணெங்கும் நினைவுச் சிலைகளாய், ஓவியமாய் வெள்ளை மலரேந்திய வேதங்களாய் ஈழமண்ணில் புது விதையாய் விடுதலையின் தீச்சுடராகி தேசமங்கும் சோதியாய் நிற்பவரே மாவீரராவார்.
ஏன் இவர்கள் மாவீரர்கள்?
தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள்.
தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள்.
உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறைபோட்டவர்கள்
தேச மக்களின் பாசப் பிணைப்புகளுக்காக தமது பாசங்களைப் பொசுக்கியவர்கள்
பள்ளிப் பராயத்தை பள்ளித் தோழருக்காய் பறிகொடுத்தவர்கள்
ஊரெல்லாம் உறங்கும் வேளை உறக்கமின்றி விழித்தவர்கள்.
எல்லை சுற்றி வேலிச் சிலையாய் நின்றவர்கள்
தமது மக்களுக்காய் கால்களை, கரங்கைளை இழந்து நின்றவர்கள்!
தேச விடுதலைக்காய் மரணித்த மாவீரர்களுக்கு தமிழீழ மண்ணில் மாவீரர் நாள் உறுதிப்பாடாயிற்று. இவ்வெழுச்சி நாளே தமிழீழத்தின் தேசியநாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலி வீரர்களில் முதலாவதாக வீரச் சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் (சங்கர்) நினைவு நாளை நவம்பர் 27 ஐ தமிழீழ தேசம் மாவீரர் நாளாக பிரகடனம் செய்துள்ளது.
வருடந்தோறும் இப்புனித நாளினை தமிழினம் உணர்வுபூர்வமாகக் கொண்டாடுகிறது. நினைவுகூருகின்றது.
மாவீரர் நாளை எதிர்கொள்ளுதல்
மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழமெங்கும் கொண்டாடப்படுகிறது. எழுச்சி மிகுந்த இந்த மாவீரர் எழுச்சி நாட்களானது நவம்பர் 25 இல் தொடங்கி நவம்பர் 27 இல் முடிவடைகின்றது.
இம்மாவீரர் நாட்களைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 25 ஆம் நாளுக்கு முன்னதாகவே தமிழீழமெங்கும் புனிதப்பட்டு விடுகிறது.
மாவீரர் தூபிகள் நிழற்படங்கள் அமைந்த இடங்கள் இல்லங்கள் ஒழுங்கைகள் வீதிகள், கல்விக்கூடங்கள் பொது இடங்கள் காரியாலயங்கள் அனைத்தையுமே மக்கள் அனைவரும் தனித்துவம் ஒருமித்தும் புனிதமாக்கி விடுகின்றனர் இவையாவும் மாவீரர் நினைவாக அலங்கரிக்கப்பட்டு தமிழீழ நாடு புதுப் பொலிவுடன் விளங்கும்.
மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27
ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். வேறு களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு பிரிவாக அமைப்புக்கள் ரீதியாக ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
பாடசாலைகள்
ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும்இ பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் பணியினை மாணவர்கள் பொது மக்களும் பொது நிறுவனங்களும் முழுமையாக இணைவதில் தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
தமிழீழ மாவீரர் நாள் நவம்பர் 27
தமது இன்னுயிரை ஈந்து தமிழீழ விடுதலைப் போருக்கு வீறு சேர்த்த மாவீரர்கள் அவர்களின் தலைமுறையிலேயே போற்றப்பட வேண்டும். அவர்களின் வீரங்களும் ஈகங்களும்இ அருஞ்செயல்களும் மக்களிடம் எடுத்துச் சொல்லப்பட வேண்டும். அந்த மாவீரர்களின் பெற்றோர்களும் குடும்பத்தினர்களும் அவலப்படக் கூடாது என்ற நோக்கின் அடிப்படையில் எமது தலைவரின் எண்ணத்திலிருந்து உருவானதுதான் மாவீரர் நாள்.
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவீரரையும் தனித்தனியாக ஆண்டுதோறும் அவரவர் நிறைவு நாட்களில் நினைவுகூர இயலாது என்ற நிலையில் அனைவரையும் ஒரே நாளில் நினைவுகூரக்கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த எமது இயக்க வீரர் லெப்ரினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
விடுதலைப் போராட்டத்தில் உலகம் வியக்கும் வகையிலே புதிய வரலாறு படைத்து புதுமை சேர்த்து நிற்கும் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் மண் மீட்புப் போரிலே பல வெற்றிகளைக் குவித்துவரும் அதே நேரம் நாட்டை எல்லாத் துறைகளிலும் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களைத் தீட்டி வழிகாட்டி இயங்கி வருவதோடு தூய்மையான தேசிய விடுதலைப் போரை வீறோடு நடாத்தி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களைப் போற்றி நினைவில் நிறுத்தவும் அவர்களது பெற்றோரும் குடும்பத்தினரும் அல்லலுறும் நிலையை மாற்றவும் எனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகின்றனர்.
1989 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் நாளை முதலாவது தமிழீழ மாவீரர் நாளாகத் தமிழீழம் உணர்வார்ந்த நிலையில் கடைப்பிடித்தது. அன்றிலிருந்து தமிழீழத்தின் மிகப்பெரிய நிகழ்வாக தமிழீழ மாவீரர் நாள் தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஏனைய நாடுகளில் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கும் தமிழீழம் மாவீரர் நாளைக் கடைப்பிடிப்பதற்கும் பெரும் வேறுபாடுகளுண்டு. ஏனைய நாடுகள் எல்லாம் விடுதலைக்குப் பின் அமைந்த அரசுகளால் விழா எடுக்கப்படுகின்றனவே தவிர போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலங்களில் விழாக்கள் எடுக்கப்படுவதில்லை. ஆனால் விடுதலைப் போராட்டம் வீறோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையிலும் எதிரியின் அச்சுறுத்தல்கள் தாக்குதல்களுக்கிடையிலும் பல்வேறு நெருக்கடிகளுக்கிடையிலும் போராட்டத்தையும் நடாத்திக்கொண்டு தமிழ் மக்கள் மண்ணின் விடிவுக்காகத் தம் இன்னுயிரை ஈய்ந்த மாவீரர்களை எழுச்சியோடு நினைவுகூர்ந்து வருகின்றனர்.
வீரச்சாவடையும் தமிழீழ மாவீரர்களது வித்துடல்கள் மாவீரர் துயிலுமில்லங்களில் கல்லறைகளில் விதைக்கப்பட்டு நடுகற்கள் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன. மாவீரர் நாளில் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டு அன்று தமிழீழ மக்களால் போற்றி மதிப்பளிக்கப்படுகின்றனர். உலகில் எங்குமே தமிழீழ மாவீரர் நினைவுபோல மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் அவர்களின் பெற்றொரும் குடும்பத்தினரும் போற்றப்பட்டு மதிப்பளிக்கப்படும் நிகழ்வுகள் நடைபெற்றதாகவோ நடைபெறுவதாகவோ வரலாறில்லை.
மாவீரர் எழுச்சி நாட்களின் நிகழ்வுகளும்இ நடைமுறை ஒழுங்குகளும்
1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நாளாகவும் 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27ஆம் நாள்வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாகக் கடைப்பிடிக்கப்பட விருக்கின்றன.
தமிழீழ தேசியக் கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்.
மாவீரர் நாள் தொடக்க நிகழ்வுகள்
01. சுடரேற்றல்
02. தேசியக் கொடியேற்றல்
03. மலர் வணக்கம்
04. அக வணக்கம்
05. உறுதியுரை
06. நினைவுரை
என்பன வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும். தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.
தேசியக் கொடி ஏற்றல்
மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாளன்று காலை 8.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகும்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் 25 ஆம் நாள் காலை 8.00 மணிக்கு ஏற்றப்படும் தேசியக் கொடி நவம்பர் 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
இயக்கப் பணிமனைகள் தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலை ஏற்றப்படும். நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.
பொது நிறுவனங்களிலும் பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும்இ மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக் கொடி இறக்கப்பட்டு மறுநாள் காலையில் ஏற்றப்பட வேண்டும்.
(தேசியக்கொடி ஏற்றுதல் இறக்குதல் தொடர்பான கூடுதலான விளக்கங்கள் தேசியக் கொடிப் பயன்பாட்டு விதிக் கோவை என்னும் நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.)
நினைவொலி எழுப்பலும் சுடரேற்றலும்
27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள்.
துயிலுமில்ல மைதான நடுவில் – பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும். மக்கள் வெள்ளம் உணர்வுக் கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையவர்கள் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும் வாசலிலும் மாவீரரின் சுடரொளியை அனைவரும் ஏற்றுவர்.
சுடரானது சுவாலை விட்டெரியும். ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப் பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாகிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.
சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாக நினைவுகூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந்நேரத்தில் எங்கும் ஒளிர வேண்டும். சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகள் ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீப்பந்தங்கள் ஏற்றியும் பொது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூர வேண்டும். இந்த சுடரேற்றும் நிகழ்வானது விடுதலைப் பாதைக்கு உறுதியையும் உணர்வையும் கொடுத்து நிற்கின்றது.
நவம்பர் 27 இரவு நிகழ்வுகள்
தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை
மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக் கூடியதாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.
நினைவொலி எழுப்புதல்
(6.05 மணி)
தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும். உயிர்காப்புப் பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்ற வகையில் நிறுத்தப்பட்டு அமைதி பேணப்படல் வேண்டும்.
அக வணக்கம் (6.06 மணி)
மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 6.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அக வணக்கம் செலுத்தப்படும். இந்நேரம் இல்லங்களிலும் ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்துதல் வேண்டும்.
ஈகைச் சுடரேற்றுதல் (6.07 மணி)
அகவணக்கம் நிறைவுற்றதும் 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படுதல் வேண்டும். (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடரேற்ற வேண்டிய கல்லறைகள் நினைவுக் கற்களுக்கு முன்னால் 5.45 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)
மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள் நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர் குடும்பத்தினர் அதே நேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.
இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராதபோது மக்கள் தமது இல்லங்கள் பொது இடங்கள் அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரிய முறைப்படி ஈகைச் சுடரேற்றுவர். ஈகைச் சுடரேற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும். (மாவீரர் ஈகைச் சுடர் ஏற்றப்படும் நேரத்தில், அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாது. வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறு வகையில் ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல் வேண்டும்.)
போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்
எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது தமிழீழத்தின் விடிவிற்காகவும் உயிரைத் தற்கொடையாக ஈய்ந்து இந்த மண்ணிற்கே உரமாகி விட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.
உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும் எமது சக போராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம் அவர்களின் உணர்வுகள் இலட்சிய தாகம் கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகவும் புனிதத் தன்மை வாய்ந்தவையுமாகும். காலம் காலமாக நினைவுகூர்ந்து என்றும் போற்றப்பட வேண்டியவையாகும்.
இம்மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழி நடாத்தும் உந்துசக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய நினைவு கூரல் என்பது ஒரு நிகழ்வாக மட்டும் இருந்து விடாது. எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும் பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரல் வேண்டும்.
இந்த எமக்குரிய உயரிய நிகழ்வைத் தத்துவார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த ஒருங்கிணைந்த பங்களிப்புக்களை வேண்டி நிற்கின்றோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தயாகம்
நன்றி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments