குறிப்பாக, வட மாகாணத்தில் மாத்திரம் 15,284 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல இந்நிலையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாடளாவிய ரீதியில் மழை, வெள்ளம் காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காலை மத்திய – தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு இன்று காலை 8.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
இது மேலும் வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானம் காணப்படலாம்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 208 குடும்பங்களைச் சேர்ந்த 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ராமயன்குளம் உடைப்பெடுக்கும் அபாயம் காணப்படுகிறது.
100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலப்பரப்பு வெள்ள நீரில் அழிவடைவதைத் தடுக்க விவசாயிகள் மண்மூடைகளை அடுக்கி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள், வீடுகள் நீரில் மூழ்கி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதுடன் சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் இறந்த நிலையில் முதலைகள், கரையொதுங்குகின்றமை மக்கள் மத்தியில் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது.
கன மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நந்திக்கடல் பெருக்கெடுத்துள்ளமையால் வட்டுவாகல் பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் அந்த வீதியால் பயணிப்பவர்கள் கடுமையான போக்குவரத்து இடர்ப்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 43 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 12 ஆயிரத்து 463 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 629 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவின் 3 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை மன்னார் மாவட்டத்தில் 14 தற்காலிக நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 367 குடும்பங்களைச் சேர்ந்த 1,248 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர், பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமெனவும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.