காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான கனிஷ்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் 5 விக்கெட் கைப்பற்றி வரலாறு படைத்தார்.
ஆயினும் மழை போட்டி; கைவிடப்பட்டதால் முடிவு கிட்டவில்லை.
கனிஷ்ட சர்வதேச போட்டியில் விளையாடிய முதலாவது சந்தர்ப்பத்திலேயே மிகத் திறமையாக பந்துவீசிய ஆகாஷ், எதிரணியின் நான்கு வீரர்களை நேரடியாக போல்ட் செய்ததுடன் மற்றையவரை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆட்டம் இழக்கச் செய்தார்.
அவர் 7.5 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்
முதலில் துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணி 19ஆவது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 76 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.
ஆரம்ப வீரர்களான மொஹமத் ரிதோய் ஹொசெய்ன் 40 ஓட்டங்களுடனும் அப்துல்லா அல் முஹி 31 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அப்போது தனது 3ஆவது ஓவரை வீசிக்கொண்டிருந்த விக்னேஸ்வரன் ஆகாஷ், ஆரம்ப வீரர்கள் இருவரினதும் விக்கெட்களை நேரடியாக பதம்பார்த்து ஆட்டம் இழக்கச் செய்து இலங்கை அணிக்கு உற்சாசத்தைக் கொடுத்தார்.
தொடர்ந்து தனது 5ஆவது ஓவரில் பங்களாதேஷ் அணித் தலைவர் பர்ஹான் சாதிக்கை தனது பந்துவீச்சிலேயே பிடி எடுத்து ஆகாஷ் ஆட்டம் இழக்கச் செய்தார்.
ஆகாஷ் தனது 8ஆவது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கடைநிலை வீரர்கள் இருவரை நேரடியாக போல்ட் ஆக்கி ஆட்டம் இழக்கச்செய்தார்.
ஆகாஷைவிட ரசித் நிம்சார 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.
ரெஹான் பீரிஸ் 11 ஓட்டங்களுடனும் ஜனிது ரணசிங்க 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது 50 ஓவர் போட்டி நாளையும் 3ஆவது 50 ஓவர் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமையும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கி நடைபெற உள்ளது