தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது.
புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான செயற்பாடுகளை தொடங்குவதற்கு திட்டமிடுவார்கள்
ஏலவே மைத்திரி – ரணில், கூட்டாட்சி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதாக இல்லை.
அது ஒற்றையாட்சியை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ள ஒன்றாகும்.
ஆகவே அதனை எமது கட்சி நிராகரிக்கின்றது
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதால் அரசு எந்தவிதமான முடிவுகளுக்கும் செல்ல முடியும்.
அதனை தடுக்க முடியாவிட்டாலும் அதனை தமிழர் தரப்பு ஏற்கவில்லையென ஒருமித்த குரலில் சொல்வதற்கு தமிழ் தரப்பு இணைந்து செயற்பட வேண்டும்
அதற்காக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுக்கான வரைவினை அடிப்படையாக வைத்து ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராகவே உள்ளதாக தமிழ் தேசிய ஐக்கிய முன்னணி தயாராக உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்