Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் - மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) அறிவிக்கப்பட்டது.

அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து விலகினார்.

அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர்

ஆனால் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தைத் தொடர்புகொண்டு அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது தான் தானும் அறிந்துகொண்டதாகவும், இருப்பினும் அதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் பதிலளித்தார்.

அதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது,
அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்:

‘இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

எனவே இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான செயன்முறையொன்று நியமனக்குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது.

எனவே இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்’ என தெரிவித்துள்ளாhர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments