கண்டி தவுலாஹல பகுதியில் கடத்தப்பட்ட 16 வயது மாணவியை காப்பாற்ற முயன்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.
மாணவி கடத்தப்பட்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற இந்த இளைஞர் அந்த சம்பவம் தொடர்பாக கூறுகையில்,
‘நான் அந்த வாகனத்துக்குள் ஓரளவு ஏறிவிட்டேன். அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன்.
வாகனத்தில் மூவர் இருந்தனர். அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள். என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.
நான் வீதியில் விழுந்தேன். அவ்வேளை தலை, கை, காலில் காயங்கள் ஏற்பட்டன’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை மாணவியொருவர் கடத்தப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.
ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்வி கற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த வேளையே கடத்தப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமண விவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.
வாகன சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.