முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மேற்கு கிராம சேவகர் பிரிவின் புளிய முனைக் கிராமத்தில் அமையவுள்ள சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா மையம்,
வடமாகாணத்தின் முதன்மையான ஓர் சுற்றுலா மையமாக அண்மையில் அடையாளம் காணப்பட்டது.
இது அழகான தாவரங்கள், சில வகையான பறவைகள், நிலப்பரப்புகள் மற்றும் பாரம்பரிய மீன்பிடி நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்ட மிகவும் தூய்மையான கடல் நீரேரியாகும்.
இத்திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகளிற்காக சுற்றுலா அமைச்சு ரூபா 9.6 மில்லியணை ஒதுக்கியிருந்தது.
இச்சுற்றுலாத்திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புளிய முனைக் கிராம பொது மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாயின் போது இத்திட்டம் தொடர்பாக விபரித்த அரசாங்க அதிபர் – முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் தொலை நோக்கான (Vision) ‘நிலைபேறான உயர்தர வாழ்க்கைத் தரம் கொண்ட வளமான மாவட்டம்.’
(A prosperous district with sustainable high standards of living.) என்பதனை நனவாக்கும் செயற்பாடுகளில் ஓர் அங்கமாக இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும்,
முல்லைத்தீவில் மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஒரு வழிமுறையாக சமூகம் சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்துவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும்
இந்த சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம்இ உள்ளூர் சமூகங்கள் தங்கள் கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் அதே வேளையில், சுற்றுலா நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கவும் பயனடையவும் அனுமதிக்கும் நிலையான அணுகுமுறையாகும் எனவும்.
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவதையும், பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதையும், பிராந்தியத்தில் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டார்.
இன்றைய இந்தக் கலந்துரையாடலின் போது மேற்படி சமூகம் சார்ந்த சுற்றுலாத்திட்டத்தை செயற்படுத்தும் பொருட்டு கொக்கிளாய் மேற்கு புளியமுனை சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாட்டுச் சங்கம் எனும் சமூக அமைப்பு உருவாக்கப்பட்டதுன் அதன் நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இத்திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடுகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்ததுடன் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் கிராம மக்களுடன் கலந்துரையாடப்பட்டது.
இச் சுற்றுலாத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், சுற்றுலா அமைச்சு வடமாகாண சுற்றுலாப் பணியகம், கரைத்துரைப் பற்று பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை, கொக்கிளாய் மேற்கு சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் என்பவற்றின் கூட்டிணைப்புடன் செயற்படுத்தப்படவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் கரைத்துரைப் பற்று உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர் ,வடமாகாண சுற்றுலாப் பணியக அலுவலர், முல்லைத்தீவு மாவட்டச் செயலக பிரதம அபிவிருத்தி உத்தியோகத்தரும் திட்ட இணைப்பாளருமான திரு.ரஜனிக்காந், கொக்கிளாய் மேற்கு கிராம அலுவலர் மற்றும் புளியமுனைக் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்> யாழில் வன்முறைக் கும்பலின் அட்டகாசம்:அதிர்ச்சி காணொளி!