தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம்…!
தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.
எந்த மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் விடுதலைப் புலிகள் மூர்க்கத்தனமான ஓர்மத்தினைக் கொண்டிருந்தார்கள்.
போர்க்களமும் பங்கர் வாழ்க்கையும் மட்டும் தமது குறிக்கோளை எட்டிவிடுவதற்கு துணை நிற்கப்போவதில்லை என்பதை விடுதலைப் புலிகள் நன்குணர்ந்திருக்கவேண்டும். அதனால்தான் அவற்றிற்கும் மேலாக நீதி நிர்வாகக் கட்டமைப்புக்களோடு மொழிக்காப்பு நடவடிக்கையிலும் சமபங்கு அளவுக்கு இறங்கினார்கள்.
விடுதலைப் புலிகளின் தமிழ் மொழி முக்கியத்துவம் எங்கு ஆரம்பிக்கின்றதெனில், அவர்கள் தமது அமைப்பிற்கு சூட்டிய பெயரிலும் உறுப்பினர்களுக்கு சூட்டிய இயக்கப் பெயர்களுமே. தூய தமிழ்ச் சொற்களைத் தேடிப்பிடித்து போராளிகளுக்கு சூட்டுவதில் முன்னின்று செயற்பட்டார்கள்.
தமிழை வளர்ப்பதற்கென்று தனியான ஒரு துறையினை தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் நிறுவினார்கள். தமிழ் வளர்ச்சிக் கழகத்தினூடாக தமிழர்களுக்கு வைக்கப்பட்ட வேற்றுமொழிப் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அத்துடன் தூய தமிழ் பெயர்கள் பல்லாயிரக்கணக்கில் பரிந்துரைக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் தமிழில் புதிய கலைச் சொற்களை ஆக்குவதில் முன்னின்று பாடுபட்டது. இன்று இந்தியா, மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் அறிஞர்களால் உருவாக்கப்படும் கலைச் சொல் உருவாக்க ஆர்வத்துக்கு முன்னோடிகளாய் வித்திட்டவர்கள் விடுதலைப் புலிகள்தான்.
தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கலைச் சொற்களின் சில பட்டியலை இங்கு காரணத்துடன் இணைக்கின்றோம்.
காவல்துறை-பொலிஸ்
பொலிஸார் சட்டம் ஒழுங்கு என்பவற்றின் காவலர்களாக இருப்பதனால் முதலில் காவலர்கள் என்றும் காவல்காரர் என்றும் அழைக்கப்பட்டனர். ஆனால் அரசாங்கத்தின்கீழ் அவர்கள் ஒரு தனித் துறையினாராக இருப்பதனால் ஏனைய காவல்காரர்களிடமிருந்து வகைபிரிக்கவேண்டிய தேவை இருந்தது. இதனால் காவல்துறை என்று தூய தமிழில் கலைச் சொல் இடப்பட்டது.
வெதுப்பகம்-பேக்கரி
பாண் முதலான பேக்கரி உற்பத்திகள் நெருப்பு வெக்கையில் வெதுப்பப்படுவதனால் அதற்கு வெதுப்பகம் என்றே தூய தமிழில் கலைச் சொல் இட்டனர்.
வெதுப்பி-பாண்
வெக்கையில் வெதுப்பப்படுவதனால் வெதுப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
குதப்பி-கேக்
கேக் உற்பத்திச் செய்முறையானது குதப்பிக் குதப்பி செய்யப்படுவதனால் குதப்பி என தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
குளிர்களி-ஐஸ்கிறீம்
குளிர்சார்ந்த ஒரு களியாக காணப்படுவதால் குளிர்களி என்றே தூய தமிழில் கலைச்சொல் இட்டார்கள்.
தரையில் ஓடும் வாகனங்களுக்கு தூய தமிழ்ச் சொற்களை உருவாக்கினார்கள்.
வாகனங்கள் மோட்டார் பொறிமுறையில் இயக்கப்படுவதனால் மோட்டாருக்கு உந்து என்ற தூய தமிழ்ச் சொல்லினை சூட்டியதுடன் அந்த மோட்டாருடன் இணைந்ததாக வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப தரம்பிரித்து கலைச்சொல் சூட்டினார்கள்.
பேருந்து-பஸ்
சிற்றுந்து-மினிபஸ், வான்
மகிழுந்து-கார் (மகிழ்ச்சியான உணர்வைக் கொடுப்பதால் மகிழுந்து)
பாரவுந்து/கனவுந்து-லொறி
தொடருந்து-ரயில்/புகையிரதம் (புகையிரதம் தமிழ் சொல் இல்லை. இதிலுள்ள இரதம் என்பது வடமொழி)
போருந்து-டாங்கி
உந்துருளி-மோட்டார் சைக்கிள்
நீருந்து-எஞ்ஜின் படகுகள்
ஈருருளி-சைக்கிள்
இவற்றினை ஓட்டுபவர்களை சாரதி என்று வடமொழியில் கையாளாமல் ஓட்டுநர்கள் என அழைத்தார்கள்.
வானத்தில் விமானத் தொழி நுட்பத்தில் பறப்பனவற்றுக்கு ஊர்தி என பெயர் வைத்தார்கள்.
விமானம்-வானூர்தி (விமானம் வடமொழிச் சொல்லாகும்)
கெலிஹொப்டர்-உலங்கு வானுர்தி (உலங்கு என்றால் காற்றாடி என்பதற்குரிய சொல்)
விமானம் செலுத்துபவர்களை விமானிகள் என்று வடமொழியில் கூறும் வழக்கமே இருந்தது. ஆனால் அதற்கு தூய தமிழில் வானோடிகள் என்று கலைச் சொல் இட்டார்கள். அதேபோல் விமானத்தளங்களை வானூர்தித் தளம் என்று அழைத்தார்கள்.
இவற்றைவிட தொழில் நிலையங்களுக்கு பணிமனைகள் என்றும், வங்கிக்கு வைப்பகம்என்றும், பிரிவுத் தலைவர்களுக்கு பொறுப்பாளர்கள் என்றும் கையாண்டு அவற்றினைப் பாவனையில் கொண்டுவந்தார்கள் விடுதலைப் புலிகள்.