Monday, January 6, 2025
Homeசெய்திகள்திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள்

திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக எழுந்த மக்கள்

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்கள் இல்லாத தனியாருக்கு சொந்தமான காணிகளையும், பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளையும் தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது ‘புதைபொருள் திணைக்களமே குச்சவெளி சந்தைக்கட்டட காணியை புதைக்காதே

‘தொல்பொருள் திணைக்களமே குச்சவெளி நெற்களஞ்சிய கட்டடத்திற்கு தொல்லை தராதே’

‘தொல்பொருள் அதிகாரிகளே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே வேற்றுமையை உண்டாக்காதே’,

போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும், கோசங்களையும் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் குச்சவெளி கிராம சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

குறித்த காணிகளை கையகப்படுத்தும் முகமாக அப்பகுதிகளில் எவ்வித அறிவித்தலும் இன்றி இரவோடு இரவாக பெயர்ப்பலகையை காட்சிப்படுத்தியுள்ளதாகவும் இந்த காணிகளில் தொல்லியல் சின்னங்கள் எவையும் இல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் இந்த காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் பிரதேச சபைக்குச் சொந்தமான 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் கடைத்தொகுதிகளுடன் காணப்பட்ட பகுதியும் மற்றுமொரு இடத்தில் நெற் களஞ்சியமாக காணப்பட்ட பழைய கட்டடங்களுடன் கூடிய பகுதியையும் தொல்லியலுக்குரிய இடமாக கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும்
இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதை அனுமதிக்க முடியாது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் குறித்த சட்ட விரோதமான செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு குச்சவெளி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன்

மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடமும் இது தொடர்பான மகஜர்களை கையளிக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் இது தொடர்பாக தொல்லியல் திணைக்கள் திருகோணமலை மாவட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும்
இது தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினுடைய அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும் அவர்களுடன் கலந்தாலோசித்து தீர்வினை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments