இந்தியாவுடனான நான்காவது டெஸ்டில் அவுஸ்திரேலியா 333 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றது
இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது போர்டர் – காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் எந்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்படுகிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா தனது 2ஆவது இன்னங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் மீதம் இருக்க 333 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இந்தியா 369 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நிட்டிஷ் குமார் ரெட்டி 114 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
பந்துவிச்சில் ஸ்கொட் போலண்ட், பெட் கமின்ஸ், நேதன் லயன் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட்களை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.
மானுஸ் லபுஷேன் (70), பெட் கமின்ஸ் (41) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர்.
எனினும் அடுத்த 3 விக்கெட்கள் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் விழ அவுஸ்திரேலியா மீண்டும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், நேதன் லயன் , ஸ்கொட் போலண்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் பும்ரா 4 விக்கெட்களையும் மொஹம்மத் சிராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அவுஸ்திரேலியா 333 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றபோதிலும் கடைசி நாளான இன்றைய தினம் தொடர்ந்து துடுப்பெடுத்தாடுமா அல்லது 2ஆவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டு இந்தியாவுக்கு 334 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
நேதன் லயன் அரைச் சதத்தை அண்மித்கொண்டிருப்பதாலும் இந்தியாவுக்கு 350 ஓட்டங்களை வெற்றி இலக்காக வழங்க வேண்டும் என அவுஸ்திரேலியா கருதுவதாலும் நாளைக் காலை அவ்வணி தொடர்ந்து துடுப்பெடுத்தாட வாய்ப்புள்ளது.
இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 474 ஓட்டங்களையும் இந்தியா 369 ஓட்டங்களையும் பெற்றன.
இதையும் படியுங்கள்>இஸ்ரேல் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி!
https://www.youtube.com/@pathivunews/videos