2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது அரசாங்க வைத்திய அதிகாரி பதவியில் இருந்து இராஜினாமா செய்யாமல் கையளித்துள்ளதாக புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத் மனு தாக்கல் செய்துள்ளார்.
அரச சேவையில் தனிநபர் ஒருவர் வகிக்கும் பதவியை இராஜினாமா செய்யாமல் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது சட்டவிரோதமானது என மனுதாரர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றில் அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என்றும், அவர் எம்.பி.யாக நியமிக்கப்பட்டதை செல்லாததாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.
குறித்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா, மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மனு மீதான பரிசீலனையை ஜனவரி 15 ஆம் திகதி மேற்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.