இன்று (10) மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் நீதியைக்கோரி கிளிநொச்சியில் விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
மூன்று தசாப்தகால யுத்தத்தின்போதும், இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி 2017 ஆம் ஆண்டு முதல் 2500 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்
இந்த நிலையில் வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வருடாந்தம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று விசேட கவனயீர்ப்புப்போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
அதன் தொடர்சியாக மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும், அதேவேளை வட, கிழக்கின் 8 மாவட்டங்களிலும் தனித்தனியாக போராட்டங்களை நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.