வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணிநேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி கடந்த இரண்டு மாதங்களாக மின் துண்டிக்கப்படுவதாக பிரதேசவாழ் மக்கள் கவலை வெளியிட்டள்ளனர்
இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உட்பட கிராம மக்கள் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.
மின்சார சபையின் இச்செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது.
அவர்களது எதிர்காலம் பாதிப்படைய மின் துண்டிப்பு ஒரு காரணமாக அமைந்துள்ளது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
‘துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே’,
‘மின்சார சபையே மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே’
போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் சுமார் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வாகரை பொலிஸார் போராட்ட களத்துக்கு சென்று கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
தமக்கான தீர்வினை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மகஜரொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.
இப்பிரச்சினை தொடர்பில் பிரதேச செயலாளர் வாக்குறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.