Wednesday, December 25, 2024
Homeஉள்ளூர்தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளது- பொ. ஐங்கரநேசன்.

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளது- பொ. ஐங்கரநேசன்.

நடைபெறவுள்ள பொது தேர்தலில் சனநாயகத் தமிழ் அரசு கூட்டமைப்பின் சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சிறுப்பிட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழ் தேசியத்தை, தமிழை தங்களது பெயரில் கொண்டுள்ள கட்சிகள் மாத்திரமல்ல, அரசு சார்புக் கட்சிகளின் வேட்பாளர்கள் கூட தமிழ் தேசியம் பற்றி தேர்தல் மேடைகளில் தற்போது முழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியத்தை இன்று உச்சரிப்பவர்கள் பலரும் தமிழ் தேசியத்தைக் கைவிட்டவர்களாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் பயணிப்பவர்களாகவுமே உள்ளார்கள் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நெஞ்சில் தமிழ் தேசியம் இன்றும் அடைகாக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறதெனவும் இதனால்தான் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு இரண்டேகால் இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்ததாக பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியத்தில் தடம் மாறாது பயணிக்க விரும்பும் இம்மக்கள் யாவரும் மாம்பழம் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ் தேசியம் என்பது உள்ளீடுகள் அற்ற ஒரு வெற்றுக்கோது அல்லவெனவும் ஓர் இனம் பேசுகின்ற மொழி, அது வாழ்கின்ற சூழல், அதன் பண்பாடு ஆகியன பற்றிய ஒருகூட்டுப் பிரக்ஞையே தேசியமாகும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

இது அந்த இனத்தின் ஆன்மா போன்றதெனவும் தேசியத்தின் கூறுகளாக உள்ள மொழி, சூழல், பண்பாடு ஆகியவனவற்றுக்கு எதிராக ஆக்கிரமிப்பு நிகழுகின்ற போதெல்லாம் உண்மையான தேசியவாதிகள் அதற்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள – பௌத்த தேசியவாதத்தால் தமிழினம் ஆக்கிரமிக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்களிடையே தமிழ் தேசிய உணர்வுநிலை மேலெழுந்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.


முள்ளிவாய்க்கால் யுத்தத்துடன் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதவழிப் பயணம்தான் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்ததாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் முடிவோடு ஒரு தொடர் அஞ்சலோட்டம் போல தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு அந்தப் பாதையில் இருந்து விலக ஆரம்பித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று அது தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் இருந்து வெகுதூரம் விலகிவிட்டதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பெரும்பான்மை வகித்த தமிழ் அரசுக் கட்சி முதலில் கூட்டமைப்பைபிலிருந்து புலிநீக்கம் செய்ததாக பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

இப்போது தமிழ் தேசியக் கோட்பாட்டையும் முற்றாக நீக்க முனைந்துள்ளதாகவும் தமிழ் தேசியப் பசுமை இயக்கம் தேசியத்தையும், சூழலியத்தையும் விடுதலைப் போராட்டத்தின் இலக்கை நோக்கிய இரண்டு வழிமுறைகளாகக் கருதி உறுதியோடு பயணித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியத்தில் தடம்மாறாது பயணித்து வரும் நாம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதாகவும் மக்கள் போலித் தமிழ் தேசியவாதிகளை நிராகரித்து எம்மை ஆதரிக்க வேண்டும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/share/p/1Awmya8PLC/

https://tamilwin.com/article/an-electoral-field-that-asks-what-nationalism-1731296723

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments