ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகிவருவதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு முப்படைகளின் கூட்டு தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரஷியாவுக்கு கூடுதலாக சிறப்புப் படை வீரா்களை அனுப்புவதற்கான ஆயத்த நடவடிக்கைகளில் வட கொரியா இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக, இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு விநியோகிக்க வட கொரியா ஆயத்தமாகிவருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.
1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது.
வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.
இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா,
போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 12,000 வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியா அழைத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்காவும் உக்ரைனும் தெரிவித்தன.
ரஷியாவின் கூh்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறிய தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம்,
மோதலில் 100 வட கொரிய வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாh் 1,000 வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறியது.
இந்தச் சூழலில், ரஷியாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தமாகி வருவதாக தென் கொரியா தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்>மத்திய பட்ஜெட் :பொருளாதார நிபுணா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!