‘ஆட்சிக்கு வர முன்னர் ஒரு கதையும் ஆட்சிக்கு வந்தவுடன் வேறு கதையையும் ஜனாதிபதிக் கூறிக்கொண்டிருக்கிறார்’ என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளதாவது ‘ அநுரகுமார திஸாநாயக்க எனும் ஜனாதிபதி வேட்பாளருக்கும், அநுரகுமார திஸாநாயக்க என்ற ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கும் இடையே பாரிய வேறு பாடுகள் காணப்படுகின்றன.
இதனால் நாட்டு மக்கள் இன்று நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தல் மேடையில் அவர் என்ன கூறினார்? 6 மாதங்களுக்கு ஒரு தடவை அரச உத்தியோகஸ்தர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகக் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதாகக் கூறினார். மின்கட்டணம், நீர்க்கட்டணத்தைக் குறைப்பதாகக் கூறினார்.
கடவுச் சீட்டு வரிசையை இல்லாதொழிப்பதாகக் கூறினார்.
இப்படி கூறிய ஜனாதிபதி ஒரு வாக்குறுதியையேனும் நிறைவேற்றியுள்ளாரா?
இதிலிருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நாக்கு அரசியல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாக்கு எடுக்க ஒரு கதையும் வாக்கு எடுத்து அதிகாரத்திற்கு வந்தவுடன் இன்னொரு செயற்பாட்டையும்தான் ஜனாதிபதி செய்து வருகிறார். ஐ.எம்.எப். இற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஜனாதிபதி, இன்று ஐ.எம்.எப்.இன் கைப்பாவையாக மாறியுள்ளார்’ இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.