கண்டி மாவட்டத்தின் கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இரண்டு இளம் முஸ்லிம் பாடசாலை மாணவிகள் பிரதான வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு சிறிய கறுப்பு வேனில் வந்த குழுவினர், மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர்.
இதில் பயந்துபோன மற்றொரு மாணவி அங்கிருந்து ஓடியுள்ளார். அவரை காப்பாற்றுவதற்கு நபரொருவர் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை.
இதனையடுத்து, கடத்தலுடன் தொடர்புடைய வேன் பொலன்னறுவை நகரில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வாகனம் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறுமி மற்றும் கடத்திய நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
எவ்வாறாயினும், கடத்தலில் ஈடுபட்ட நபர் கடத்தப்பட்ட மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் உறவினர்களால் தவுலகல பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்திச்சென்றவர்களை கைது செய்வதற்குரிய விசாரணை வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.